search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் ரெயில் நிலையம்"

    எழும்பூர் நோக்கி வந்த அனந்தபுரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    அடையாறில் தங்கி இருந்த அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனி ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் அவர் தடா சென்று பின்னர் மீண்டும் தனி ரெயிலில் சென்னை திரும்ப பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. அவர் பயணம் செய்வதற்காக தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தனி ரெயில் திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரசும், திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசும் எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட சிக்னல் கொடுக்கப்படவில்லை.

    வெங்கையாநாயுடு செல்ல வேண்டிய தனி ரெயில் புறப்பட தாமதம் ஆனதால் முத்துநகரும், அதனை தொடர்ந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரசும் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன. தனி ரெயில் எழும்பூர், சென்ட்ரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் அதே வழித்தடத்தில்தான் முத்துநகரும், அனந்தபுரியும் வர வேண்டியது இருந்தது. இதனால் 2 ரெயில்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன.

    மேலும் எழும்பூர் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டால் அந்த வழியாக தனி ரெயில் செல்ல வழி கிடையாது என்பதால் தென் மாவட்ட ரெயில்கள் இரண்டையும் தாம்பரத்தில் நிறுத்தி விட்டனர்.

    துணை ஜனாதிபதி பயணம் தாமதம் இல்லாமல் தொடங்கி இருக்குமானால் முத்துநகர், அனந்தபுரி ரெயில்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் செல்லக்கூடிய தனி ரெயில் 7.50 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. அதனால் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட 2 ரெயில்களிலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    சிலர் மின்சார ரெயில்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். வயதானவர்கள், குழந்தையுடன் வந்தவர்கள் மட்டுமே அந்த ரெயில்களில் காத்து கிடந்தனர்.
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் திடீரென மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #SterlitePlant #Mukilan
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் மாயவன்.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.

    இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறினார்.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி உள்ளார். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.



    இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    முகிலன் கடத்தப்பட்டதாக அச்சப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோல் முகிலன், சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். #SterlitePlant #Mukilan
    விமானம் மற்றும் ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக விரைவில் மெட்ரோ ரெயில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. டி.எம்.எஸ். -வண்ணாரப்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

    தற்போது மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மீனப்பாக்கத்தில் உள்ள உள்நாடு, வெளிநாடு விமான நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரலில் உள்ள எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையில் வருகின்றனர். இந்த பயணிகளை கவரும் வகையில் மெட்ரோ ரெயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    விமானம் ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நீட்டிக்கப்பட உள்ளது.

    இது குறித்து விரைவில் முறைப்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. #MetroTrain
    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடு அணிந்து போராட்டம் நடத்தினார்கள். #FarmerStruggle #Delhifarmerprotest

    சென்னை:

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து டெல்லியில் 2 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பங்கேற்றனர்.

    அவர்கள் போராட்டம் முடிந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் அய்யாகண்ணு தலைமையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.


    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ரெயிலில் திருச்சிக்கு செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அதில் பாதிபேருக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகி இருந்தது. மற்றவர்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆக வில்லை. அவர்களுக்கும் டிக்கெட் கன்பார்ம் செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி 1 வருடம் ஆகிவிட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு மோடி செவி சாய்க்க வில்லை.

    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.  #FarmerStruggle #Delhifarmerprotest

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணி காரணமாக தென்மாவட்ட ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
    சென்னை:

    சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் தண்டவாள பாயிண்ட் பராமரிப்பு பணி நள்ளிரவு முதல் நடைபெற்றது. இந்த பணியை அதிகாலைக்குள் முடிப்பதற்கு தொழில் நுட்ப பணியாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் அந்த பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது. பணியை முடிக்க நேரம் நீடித்ததால் எழும்பூர் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் உள்ளே வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், மலைக்கோட்டை ஆகிய ரெயில்கள் வந்து சேர்ந்தன. அதன் பின்னர் வந்த தென்மாவட்ட ரெயில்கள் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. தண்டவாளத்தை பிரித்து ஒவ்வொரு பிளாட்பாரத்திற்கும் ரெயில்களை அனுப்பக் கூடிய ‘பாயிண்ட்’ சரி செய்யும் பணி முடிப்பதற்கு நேரம் அதிகமானதால் ரெயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கூடுவாஞ்சேரியிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் காட்டாங்கொளத்தூரிலும், ராமேஸ்வரம், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி ஆகிய ரெயில்கள் வழியிலும் நிறுத்தப்பட்டன.

    ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்ட பின்னர் எப்போது புறப்படும், எதற்காக நிறுத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் நிர்வாகம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து விட்டு மின்சார ரெயிலில் ஏறி தாம்பரம், எழும்பூருக்கு சென்றனர்.

    நெல்லை எக்ஸ்பிரசில் 150 மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்தனர். அவர்களை அந்த ரெயிலில் வந்த பயணிகள் பத்திரமாக கீழே இறக்கி மின்சார ரெயிலில் ஏற்றி விட்டனர். தாம்பரம் ரெயில் நிலையத்திலும் அவர்களை பாதுகாப்பாக இறக்கி விட்டனர்.

    இதற்கிடையில் பராமரிப்பு பணி விரைவாக முடிக்கப்பட்டு ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஆனாலும் வழக்கமான நேரத்தை விட 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் எழும்பூர் வந்து சேர்ந்தன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். #EgmoreRailwayStation #TrainsDelayed
    சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி தான் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #DogMeatInChennai #MeatRumour
    சென்னை:

    சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த இறைச்சியை அனுப்பிய நபர் யார்?, சென்னையில் அவற்றை பெற வேண்டிய ஏஜெண்டு யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது.



    இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில்,  கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறி என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், இறைச்சி பிரியர்களிடையே கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அச்ச உணர்வு நீங்கியது. #DogMeatInChennai #MeatRumour
    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது இன்று மாலை தெரிய வரும். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 2190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பார்சலில் அனுப்பப்பட்டிருந்த இந்த இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அது அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறைச்சி அனைத்தையும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

    எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்தவை தோல் உரிக்கப்பட்ட நாயின் தோற்றத்தில் நீண்ட வாலுடன் காணப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து நாய்களை அடித்து கொன்று அதனை பார்சலில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    இந்த நாய் இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆடு மற்றும் மாட்டுக் கறியுடன் கலந்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    சென்னைவாசிகளை பொருத்தவரையில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அசைவ ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக மட்டன் பிரியாணியை ஓட்டல்களில் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் மாட்டுக் கறி உணவும் சென்னையில் விருப்ப உணவு போலவே ஆகிவிட்டது.

    துரித உணவகங்களிலும், ஓட்டல்களிலும் மாலை நேரங்களில் மாட்டுக்கறியை (சில்லி பீப்) விரும்பி சாப்பிடுவர்கள் அதிகம். இதுபோன்ற அசைவ பிரியர்களுக்கு நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக இனி, அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்குதானோ? என்கிற எண்ணமும் மக்கள் மனதில் பரவலாக தோன்றி உள்ளது.

    சென்னையில் நாய் இறைச்சி பிடிபட்டதாக வெளியான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பரபரப்பாகவே பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் ஓட்டல்களில் பரிமாறப்படுவது நாய்கறி தானோ? என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. மட்டன் பிரியாணியில் தெரியாத அளவுக்கு நாய் கறி கலக்கப்படுவதாகவும், இதனால் அது வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை என்றும் பேசப்படுகிறது.

    பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த அசைவ உணவு சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு இன்று மாலையில் வர இருப்பதாகவும் அதன் பின்னரே பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது தெரிய வரும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    பொது மக்கள் மத்தியில் நாய் கறி தொடர்பான பீதி நிலவுவதால், எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகை இறைச்சி? என்பது பற்றி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான அறிக்கையை அளிக்க உள்ளனர்.

    அதில் பொது மக்களின் பீதியை அடக்கும் வகையில் தகவல்கள் இருக்குமா? இல்லை நாய் இறைச்சி தான் என்று உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியாக உள்ள அறிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும்.

    இதற்கிடையே நாய்க்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. #DogMeat #DogMeatinChennai
    எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லையை சேர்ந்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். #EgmoreRailwayStation #Delivery #PregnantWoman
    சென்னை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி சுவர்ணலதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கி தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இதையடுத்து, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லைக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் புறப்பட்டனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கையில் (இரவு 7.40 மணி) சுவர்ணலதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். இதனால் அவரது கணவர் செய்வதறியாது திகைத்தார்.

    இதையடுத்து உடன் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து உதவி மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். இரவு 7.55 மணிக்கு ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்தடைந்தது.

    இதையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் சுவர்ணலதா இருந்த ரெயில் பெட்டிக்கு விரைந்தனர்.

    குழந்தை பிறக்க சில நொடிகளே இருந்த காரணத்தால், அந்த ரெயில் பெட்டியிலேயே சுவர்ணலதாவுக்கு பிரசவம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட உடனடி சிகிச்சை காரணமாக சில நிமிடங்களிலேயே சுவர்ணலதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர். பயணிகள் சிலர் தாங்கள் வைத்திருந்த இனிப்புகளை பிறருக்கு வழங்கினர்.

    அதனை தொடர்ந்து தாயையும், சேயையும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக ரெயில் பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் பயணிகள் அனைவரும் இசக்கி-சுவர்ணலதா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை கூறினர்.

    அப்போது, தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினருக்கு இசக்கி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

    இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சுவர்ணலதாவை ‘ஸ்டிரெச்சரில்’ வைத்து தூக்கி ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுவர்ணலதாவுக்கு பிரசவம் பார்த்ததன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.  #EgmoreRailwayStation #Delivery #PregnantWoman
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 900 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனூப், சரோஜ்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது எழும்பூர் வந்த திருக்குறள் மற்றும் காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பொது பெட்டிகளில் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 37 மூட்டைகளில் இருந்த 900 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை அண்ணாநகர் உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையம், சென்னையின் முக்கிய ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டத்துக்கு பஞ்சமில்லாமல் எப்போதும் பரபரப்பாக இந்த ரெயில் நிலையம் காணப்படும்.

    இந்தநிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் குடிநீர் வினியோகம் திடீரென பாதிக்கப்பட்டது. அங்கு உள்ள ஒரு குழாயில் கூட தண்ணீர் வரவில்லை. ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளிலும் தண்ணீர் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் இதுபற்றி அங்குள்ள சுகாதார ஆய்வாளர்களிடம் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் திடீரென குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் உணவு சாப்பிட்டவுடன் கைகளை கூட கழுவிக்கொள்ள முடியவில்லை. மக்கள் கூடும் இடங்களில் தேவையான வசதிகளை செய்து தருவது அரசின் முக்கிய கடமை ஆகும்.

    அந்தவகையில் தலைநகரின் முக்கிய இடமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது ஏற்க முடியாத செயலாகும். இந்த நிலைமை இனி தொடரக் கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு, சேத்துப்பட்டு பணிமனையில் உள்ள ராட்சத தொட்டியில் இருந்தே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கு குடிநீர் வாரியத்திடம் ஒப்பந்த முறையில், தெற்கு ரெயில்வே பெற்று வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீசார் கெடுபிடி காரணமாக, சேத்துப்பட்டு பணிமனைக்கு குறைவான எண்ணிக்கையிலேயே குடிநீர் லாரிகள் வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 
    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.

    ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.
    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை நகரில் சிறந்த கட்டிட கலைகளில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. 1908-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இருந்து முதல் ரெயிலாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ‘போட் மெயில்’ என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது.

    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது. இதையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று நடைபெற்றது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்து வந்த பாதை, இயக்கப்பட்ட பல்வேறு மாடல் ரெயில் என்ஜின் உள்பட எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

    பயணிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கட்டிடத்தின் 110-வது வயதை கொண்டாடும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் ‘கேக்’ வெட்டும் நிகழ்ச்சி எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் மூத்த ஊழியரான பி.எம்.கோவிந்தராசு ‘கேக்கை’ வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயவெங்கடேசன் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். 
    ×